Tuesday, May 24, 2016

தினம் ஒரு பாசுரம் - 74

தினம் ஒரு பாசுரம் - 74

கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உந்தன்

மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான், நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ

செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!


- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)

கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் எம்பெருமானாரை உகந்து அருளிய இன்னொரு பாசுரத்தை இன்று அனுபவிக்கலாம்.

பொருளுரை:

கையில் கனியென்னக் - (உள்ளங்)கையில் (நெல்லிக்)கனி எனும் அளவுக்குத் தெளிவாக.
கண்ணனைக் காட்டித் தரிலும், - கண்ணனான திருமாலை (என் முன் வரவழைத்துக்) காட்டிப் புரியவைத்தாலும்
உந்தன் மெய்யில் பிறங்கிய - உனது திருவடிவத்தில் ஒளி வீசுகின்ற
சீர் அன்றி - மேன்மை மிக்க (கல்யாண) குணங்களை அனுபவிப்பதை விடுத்து வேறொன்றும்
வேண்டிலன் யான், - நான் (உன்னிடம்) வேண்ட மாட்டேன்
நிரயத் தொய்யில் கிடக்கிலும் - நரகச் சேற்றில் உழன்றாலும்
சோதிவிண் சேரிலும் - சோதி வடிவ பரமபதத்தைச் சென்றடைந்தாலும்
இவ்வருள் நீ - இது ஒன்றை மட்டும் (அடியேனுக்கு) நீ அருள வேண்டும்
செய்யில் தரிப்பன் - (நீ அங்ஙனம்) செய்தால் (நான் மிக்க மகிழ்வோடு) அபிமானித்து  நிலைத்திருப்பேன்
இராமானுச! - எம்பெருமானாரே!
என் செழுங் கொண்டலே! - (மழை நீர் தாங்கிய) செழுமையான மேகம் போன்றவரே!



பாசுரச் சிறப்பு:  இப்பாசுரத்தில் பரமபதம் சென்றடையும் “உய்வு” கூடத் தனக்கு அத்தனை அவசியமில்லை, ராமானுஜரின் அணுக்கமே (intimacy) எப்போதும் வேண்டும் என்கிறார், “உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்பதை முற்றும் உணர்ந்த அருஞ்சீலரான அமுதனார்!

கண்ணனைக் காட்டித் தரிலும் - இது வெறும் “காட்டித் தருதல்” அன்று.
கண்ணனை முன் கொணர்ந்து நிறுத்தி, “இவன் தான் பரமபத நாயகன், அன்று குருட்சேத்திரத்தில் அருச்சுனனுக்குக் கீதோபதேசம் அருளிய, யுத்த களத்தில் அவன் தேர் முன் நின்று முகத்தில் அம்புத்தழும்புகள் ஏற்ற திருவல்லிகேணி வேங்கடகிருஷ்ணன், கபிஸ்தலத்தின் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன், திருப்பாற்கடல் கிடக்கும் மாயன், ஆண்டாள் பாடிய கிருஷ்ண சிம்மம் (மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம்), விஷ்ணுசித்தர் குழந்தையாய்/ பாலகனாய் பாவித்து உருகிய கோகுலக் கண்ணன், நப்பின்னை வேய்ந்தோள் அணைத்த அவள் மணாளன், காஞ்சி திருப்பாடகத்தில் அமர்ந்த திருக்கோலப் பாண்டவத்தூதன், பாஞ்சாலியின் மானம் காத்த புனிதன், ஏழை சுதாமரிடம் உயர்வு/தாழ்வு நோக்கா பேரன்பைக் (சௌசீல்யம்/வாத்சல்யம்) காட்டியவன், ஒரு யானையைக் (குவலயாபீடம்) கொன்று ஒரு யானையைக் (கஜேந்திரன்) காத்த சர்வலோக ரட்சகன்” என்றெல்லாம் விளக்கிச்சொல்லி, சரணாகதியையும், திருமந்திர, த்வய, சரம ஸ்லோகங்களையும், இன்னபிற வைணவத் தத்துவங்களையும் உபதேசித்துத் தெளிவித்தலை, இதன் சாரமாக, உட்பொருளாகக் கொள்ளல் தகும்!

உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்

மேலே சொன்ன வண்ணம் “கண்ணனைக் காட்டித் தந்ததால்” அமுதனாருக்கு ஞானத் தெளிவு பிறக்காமல் இல்லை. அப்பெரும் புரிதல் கிடைத்த பின்னரும் “இராமனுஜரே, உம் மேன்மையை அனுபவிக்கும் பேறு மட்டுமே எனக்கு உவப்பானது, அது கிடைத்தால், எனக்கு நரகமும், பரமபதமும் ஒன்றே” என்று திருவரங்கத்து அமுதனார் அற்புதமாக அருளுகிறார்! என்னே அவரது ஆச்சார்ய பக்தி!


 நிரயத்தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ --’நிரயம்’ நரகத்தையும், ’தொய்யில்’ சேறு அல்லது குழம்பையும் குறிக்கிறது.  1) மானுடப் பிறப்பில் சம்சார பந்தத்தில் உழல்வது, 2) தீவினைப் பயனால் அடுத்த பூவுலகப்பிறப்பின் முன் நரகத்தில் துன்புறுவது என இரண்டையும், ”நிரயத் தொய்யில் கிடக்கிலும்”  குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் மிக மிக மேலான/ உய்வான/ பிறப்பறுக்கும் பெரும்பேறான பரமபதம் கூட, ராமானுஜரின் அணுக்கம் இல்லாத நிலையில், தனக்கு உவப்பன்று என்று அடியவர்க்கு உணர்த்துகிறார் அமுதனார்.

செழுங்கொண்டலே - பொதுவாக குருவை (ஆச்சார்யனை) மேகத்தோடும், பசுவோடும் ஒப்பிடும் வழக்கம் உண்டு. மழை நீர் நிறைந்த செழுமையான மேகம் ஞானம் நிறைந்த குருவுக்கு உருவகம் ஆகிறது. அது போலவே “பால் தரும் பசு” ஞானம் தரும் குருவுக்கு உருவகமாகிறது.


சொற்பொருள்:

பிறங்குதல்
விளங்குதல்; உயர்தல்; சிறத்தல்; மிகுதல்; பெருகுதல்; நிலைமாறுதல்; செறிதல்; பெருத்தல்; ஒலித்தல்.

நிரயம்
நரகம் .......... நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது (புறநானூறு).

தொய்யில் அல்லது தொய்யல்:
மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு; உழுநிலம்; கீரைவகை; அழகு; கிளர்ச்சி; நீர்க்கொடிவகை.

தரித்தல்
மதித்தல், ஆதரித்தல், நிலைபெற்று நிற்றல்; இருப்புக்கொள்ளுதல்; ஊன்றி நிற்றல்; அணிதல்; தாங்குதல்; பொறுத்தல்; அடக்கிக் கொள்ளுதல்; மறவாது உள்ளத்தில் வைத்தல்; தாம்பூலம் தின்னுதல்.

கொண்டல்
கொள்ளுதல்; மேகம்; காற்று; கீழ்காற்று; கிழக்கு; மேடராசி; கொண்டற்கல்; மகளிர் விளையாட்டு வகை.
எ.கா: “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்” - திருப்பாணாழ்வார்.  இங்கு கண்ணபிரானை கருநீல மேக நிறத்தவன் என்கிறார் ஆழ்வார்.

--- எ.அ.பாலா

Tuesday, May 10, 2016

தினம் ஒரு பாசுரம் - 73

செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே


- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)


இன்று எம்பெருமானார், உடையவர், எதிராசர், இளையாழ்வார், பாஷ்யகாரர் என்று வைணவ அடியார்கள் போற்றித் துதிக்கும் எந்தை பகவத் ராமானச முனியின் 1000-வது ஆண்டு திருவதார நட்சத்திர ஆரம்ப தினம் (சித்திரையில் செய்ய திருவாதிரை நாள்).   அடுத்த ஆண்டு (2017) சித்திரை திருவாதிரை நாளில் அந்த மகானுபாவர் அவதரித்து 1000 ஆண்டு காலம் முடிவுறுகிறது.

கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அன்னாரைப் போற்றி அருளிய ஒரு பாசுரத்தை இன்று அனுபவிக்கலாம்.

ஸ்ரீமன் நாராயணனைச் சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சார்யரான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை, சாதி பேதம் பாராமல், அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குருபரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கக் கல் போன்றவர் என்றால் அது மிகையில்லை.

பொருளுரை:

செழுந்திரைப் பாற்கடல் - அழகிய அலைகள் (ஆர்பரிக்கும்) திருப்பாற்கடலில்
கண் துயில் மாயன் - யோக நித்திரையில் பள்ளி கொண்டிருக்கிற (உலக ரட்சகனான) திருமாலின்
திருவடிக்கீழ் விழுந்திருப்பார் - திருவடிகளில் சரண் புகுந்த அடியவரின்
நெஞ்சில் மேவு நல் ஞானி - உள்ளத்தில் பொருந்தி அமைந்த சிறந்த ஞானியும்,
நல் வேதியர்கள் - சிறந்த குணங்கள் கொண்ட வேதியர்களால்
தொழும் திருப்பாதன் - போற்றி வணங்கப்படும் திருவடிகளை உடையவராயும் இருக்கும்
இராமானுசனைத் தொழும் பெரியோர் - எம்பெருமானாரை (சேவித்து) வழிபடும் மேன்மக்கள்
எழுந்து இரைத்து ஆடும் இடம் - களிப்புடன் (அவரைத் துதி பாடியபடி) கூத்தாடும் இடம் (மட்டுமே)
அடியேனுக்கு இருப்பிடமே - அடியேனான எனக்கு (மகிழ்ச்சி தரும்) இருப்பிடமாகும் (திருத்தலமும் ஆகும்)


பாசுரச் சிறப்பு:

இப்பாசுரத்தில், வைணவத்தில் முக்கியக் கோட்பாடான “அடியார்க்கு அடியாராய் இருக்கும்” மாண்பு போற்றப்பட்டுள்ளது. எப்படி என்று பார்ப்போம்.

”திருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி”  - பரமனின் திருவடிகளில் பரிபூர்ண சரணாகதி அடைந்த அடியவர்கள், பரமபதமான மோட்சத்தின் கடை வாயிலில் நிற்பவர்கள். அப்பேர்ப்பட்டவர்களின் உள்ளங்களில் கூட ராமானுஜர் குடிகொண்டிருக்கிறார் என்று எம்பெருமானாரின் மேன்மையை அமுதனார் நமக்கு உணர்த்துகிறார்! திருப்பாற்கடல் மாயவனின் மனதிலேயே உறைந்திருக்கும் எம்பெருமானார் அடியவரின் மனதில் மேவி இருப்பதில் ஆச்சரியம் இல்லை தானே :-) அதோடு, பரமனிடம் சரண் புகுந்தாலும், ராமானுஜ திருவடி சம்பந்தம் மட்டுமே, பரமபதம் எனும் பெரும்பேற்றை அருள வல்லது என்பதையும் அமுதனார் அற்புதமாகச் சொல்லிவிடுகிறார். “உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்பது புரிகிறதல்லவா!

“நல் வேதியர்” என்பவர் நற்குணங்கள் பெற்றவர்கள் மட்டுமே. அவற்றில் தலையானவை, அகந்தையின்மை (Humility), உயிர்களிடத்தில் உயர்வு/தாழ்வு பாராமை, திருமால் அடியார்க்கு தொண்டு செய்தல், ஞான, பக்தி, யோகங்களைக் கைக் கொள்ளுதல், அதே நேரம், தங்கள் கடமைகளை செவ்வனே செய்யும் கர்ம யோகிகளை மதித்தல் ஆகியவை.  ஆக, வேதியர் என்பது பிறப்பால் ஏற்படுவதன்று, அடியவரின் நடத்தையே சீர்மிகு குணங்களே அதை நிச்சயிக்கின்றன! இதுவும் எந்தை இராமனுஜர் நியமித்த வைணவக் கோட்பாடே என்பதை உணர்வோம்.

குருபரம்பரையின் கடை ஆச்சார்யனான, நம்பெருமாளான அரங்கன்
 “ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||” 

என்ற தனியனைச் சொல்லி தனது ஆச்சார்யனாக ஏற்ற, ஆச்சார்ய ரத்ன ஹாரத்தை பூர்த்தி செய்த, மணவாள மாமுனிகள் (இந்த மஹாசார்யருடன் குருபரம்பரை நிறைவு பெறுவதாகக் கூறுவது வைணவ மரபு) அருளிய உபதேச ரத்னமாலை என்ற நூலில் ராமானுஜரின் சீர்மையைப் போற்றியிருப்பதை நோக்கினால், ”எம்பெருமானார் வழியே வைணவ அடியவரின் வழி” என்பது தெளிவாகப் புலப்படும்.

ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்
உய்ய எதிராசர் உதித்து அருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை

என்று எம்பெருமானார் பூவுலகில் அவதரித்த தினம், ஆழ்வார்கள் உதித்த தினங்களைக் காட்டிலும், அடியவர்க்கு வாழ்வும், உய்வும் தரும் நாள் என்கிறார் மணவாள மாமுனிகள்.

மற்றொரு பாசுரத்தில்
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்

என்று திருமாலின் சீர்மை, பெருமாளை/ஆழ்வார்களைப் போற்றுதல் என்பது “எம்பெருமானார் தரிசனமே” என்று அரங்கனே நியமித்ததாக மாமுனிகள் அருளுகிறார். அதாவது, எம்பெருமானாரே, அவருடைய வாழ்நாளில், வைணவ தர்மத்தைச் சிறந்து விளங்கச் செய்தார். தன்னுடைய முன்னோர்களான நாதமுனி, ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகள் போன்ற ஆச்சார்ய பெருமக்களின் உபதேச மொழிகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக விளக்கினார்.

 ராமானுஜருக்குப் பின் வந்த குருபரம்பரை ஆச்சார்யர்கள், அவர் சொன்ன பாதையிலேயே பயணித்து, ஆழ்வார் அருளிச்செயலான திவ்ய பிரபந்தத்துக்கு பல ஈடுகளையும், வைணவ நெறி சார் உபதேச நூல்களையும் இயற்றினர். ஆக, வைணவ கோட்பாடுகள், நெறிகள், உபதேசங்கள் ஆகிய அனைத்தும் “எம்பெருமானார் தரிசனத்தால்” விளைந்தவை என்பதை மணவாள மாமுனிகள் தெளிவாக உணர்த்துகிறார்.  

இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே!

திருவரங்கத்து அமுதனார், ”சம்சார பந்தமும் வேண்டாம், பரமபத வாசம் கூட வேண்டாம், ராமானுஜ அடியார்களுடன் கூடி வாழும் பேறு மட்டுமே தனக்குப் போதுமானது, அவ்வடியார்கள் வாழும் இடமே தான் வாழ விரும்பும் திருத்தலம்” என்று எம்பெருமானாரின் மேன்மையின் உன்னதத்தை, பாசுரத்திற்கு முத்தாய்ப்பாய் அருளியிருக்கிறார்!

முடிவுரை:

அமுதனார் மற்றொரு பாசுரத்தில் சொல்வதைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.

“இன்புற்ற சீலத்து ராமானுச! என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்து இறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே”


பாசுரத்தை பிறிதொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம். இப்போது சாரம் மட்டும்.

”இன்பம் தரவல்ல மேன்மைக் குணங்கள் கொண்ட எம்பெருமானாரே! (மோட்சம் கூட வேண்டாம்!) பிணியுறக்கூடிய உடலோடு எத்தனை பிறப்புகள் எடுத்து, சொல்லவொண்ணாத் துன்பங்களில் விழுந்தாலும், உமது தொண்டர்களிடத்தில் அன்பும், அவர்க்கு தொண்டு செய்ய வல்ல பேறும் எனக்கு அருளுங்கள், அது ஒன்றே போதும்” என்கிறார் திருவரங்கத்து அமுதனார். என்னே அவரது ராமானுஜ பக்தி !!!

--எ.அ.பாலா

Monday, May 09, 2016

தினம் ஒரு பாசுரம் - 72

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
      அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
      விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடம் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
      இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே


-- குலசேகர ஆழ்வார் (பெருமாள் திருமொழி)

சேர மண்டல மன்னனாக இருந்து, ராமபிரான் மீது பரம பக்தியில் திளைத்து வாழ்ந்த குலசேகரப் பெருமாள் அருளிய திருப்பாசுரத்தை இன்று அனுபவிப்போம். குலசேகர ஆழ்வாரை ஏன் ”பெருமாள்” என்கிறோம்? வைணவப் பெருந்தகைகள், இராம காவியத்தில் வரும், திருமால் அவதாரமான ஸ்ரீராமனுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வுகளை, விவரிக்கையில், தன்னை ராமனாக பாவித்துக் கொண்டு அவை தனக்கு நிகழ்ந்தது போல ஆழ்வார் எண்ணியதால், அவருக்குப் “பெருமாள்” என்ற அடைமொழி ஏற்பட்டது. 


  இப்பாசுரம், ராமவதாரம் முடிந்து, திருமால், அயோத்தியில் வாழ்ந்த அனைத்து உயிர்களுக்கும் பரமபத பதவி அருளி, வைகுந்தம் புகுவதை கவிதை நயத்தோடுச் சொல்கிறது. 


பொருளுரை:

அன்று - இராமவதாரம் முடிவுற்ற அந்நாளில்
சராசரங்களை - (அயோத்தியில் வாழ்ந்த) எல்லா உயிர்களுக்கும்
வைகுந்தத்து ஏற்றி - பரமபதம் (ஆகிய பெரும்பேறு) அருளி
அடல் அரவப் - வலிமை மிக்க பாம்புகளுக்குப்
பகையேறி - பகைவனான கருடன் மீது ஏறி
அசுரர் தம்மை வென்று - அரக்கர்களை வென்று
இலங்கு மணி - ஒளி வீசும் மரகத மணிக்கு ஒப்பான
நெடுந்தோள் நான்கும் தோன்ற - நீண்ட நான்கு திருக்கரங்களுடன் காட்சியளித்து
விண் முழுதும் எதிர் வரத் - வானவரும், வைகுந்த அடியார்களும் எதிர்கொண்டு வரவேற்று உபசிரிக்க
தன் தாமம் மேவி - தனது இருப்பிடமான (பரமபதம் எனும்) வைகுண்டத்தில் பொருந்தி அமைய வேண்டி
சென்று  - (பூவுலகம் விட்டுச்) சென்று, 
இனிது வீற்றிருந்த - (தனது கல்யாண குணங்கள் எல்லாம் தோன்றும்படியாக) இனிமையாக எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னைத் - சர்வலோக ரட்சகனான திருமாலும்,
தில்லை நகர்த் திருச்சித்ரகூடம் தன்னுள் - தில்லை நகர் திருச்சித்திரக்கூடம் எனும் திவ்விய தேசத்தில்
என்றும் நின்றான் - என்றும் (அடியவர்க்கு அருளவேண்டி அர்ச்சாவதார திருக்கோலத்தில்) நிலை பெற்ற
அவன் இவனென்று - சக்கரவர்த்தித் திருமகனும், ஒருவனே எனத் தெளிந்து,
ஏத்தி நாளும் -  தினமும் துதித்து
இறைஞ்சுமினோ எப்பொழுதும்- எப்போதும் போற்றி வழிபடுவீர்
தொண்டீர் நீரே - அடியவரான நீங்கள் அனைவரும்!


திருத்தலக் குறிப்புகள்:


 சிதம்பரம் தில்லை நடராஜர் குடிகொண்டுள்ளது பொன்னம்பலம் எனில், அதே கோயில் பிரகாரத்தின் உள்ளே தனிச்சன்னதியில் கோவிந்தராஜப் பெருமாள் குடிகொண்டுள்ளதை திருச்சித்திரகூடம் என்கிறோம். இது 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றாம். பெருமாள் போக சயனத்தில் (மகிழ் நித்திரை) பள்ளி கொண்ட திருக்கோலத்தில் உள்ளார். (தர்பசயனம்-திருப்புல்லாணி; புஜங்கசயனம்-ஸ்ரீரங்கம்; மாணிக்கசயனம்-திருநீர்மலை) மூலவரை சக்கரவர்த்தித் திருமகன் என்றும் போற்றுகின்றனர். வீற்றிருந்த திருக்கோலத்தில் உத்சவர்: தேவாதி தேவன் எனும் பார்த்தசாரதி. சித்திரக்கூடத்துள்ளான் என்ற திருநாமத்துடன் இன்னொரு உத்சவர் உபய நாச்சிமாருடன் அருள் பாலிக்கிறார்.



சிவபெருமானின் ஆனந்த நடனத்தை அகக்கண்ணால் கண்டு மகிழ்ந்திருந்த திருமால், அதை தினமும் நேரில் கண்டு மகிழ்வுற இங்கே பள்ளி கொண்டாரோ என்று எண்ணும்படியாக, நடராஜானின் திருத்தாண்டவக் கோலத்தை அனுபவிக்கும் வண்ணம், நேர் எதிரே கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது. இங்கு கருடனுக்கு என்று ஒரு சன்னதியும், பலிபீடமும், சிறிய பிரகாரமும்  மகாலட்சுமிக்கு எனத் தனிச்சன்னதியும் உள்ளன. இத்திருத்தலத்தை வைணவர்கள், புண்டரீகபுரம் என அழைப்பதால், பிராட்டியின் திருநாமம் இங்கே புண்டரீகவல்லித் தாயார் ஆகும்.  முதன் முதலில் இக்கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மனால் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், காஞ்சியின் வைகுந்தபெருமாள் கோயிலைக் கட்டியதும் இம்மன்னனே என்றும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


"பைம்பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்திரக்கூடம் சென்று சேர்மின்களே!" 


என திருமங்கை ஆழ்வாரும் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் (மொத்தம் 32 பாசுரங்கள்)

குலசேகராழ்வாரே இன்னொரு திருப்பாசுரத்தில்

அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தி என்னும் அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை
செங்கண் நெடுங்கருமுகிலை இராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ கண்குளிரக் காணு நாளே!


அந்த இராகவனை பக்திப் பேருவகையில் உருகியுருகிப் போற்றியிருக்கிறார்! (மொத்தம் 11 பாசுரங்கள்)

பாசுரக் குறிப்புகள்: 

ராமனுக்கு முன்னமே, இலக்குவனான ஆதிசேஷன் வைகுண்டம் சென்று விட, தம்பியை பிரிந்திருக்கவியலாத ராமபிரானாகிய திருமாலும் தனது இருப்பிடமான வைகுண்டம் (”இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்” என்ற ராமானுஜ நூற்றந்தாதிப் பாசுரத்தை நினைவு கூரவும்!) செல்ல விழைகையில், அயோத்தி வாழ் மாந்தரும் இன்னபிற உயிர்களும், ராமபிரானைப் பிரிய வேண்டியதை எண்ணி மிக்க  துயரம் கொண்டனர். ராமனைச் சரணடைந்து தங்களையும் அவருடன் கூட்டிச்செல்ல வேண்ட, ராமனும் அவ்வண்ணமே அருள, பலரும் புடை சூழ, ஸ்ரீராமனும் சரயு நதியில் இறங்கி, தன்னடிச் சோதியான பரமபதத்திற்கு கம்பீரமாக எழுந்தருளிய அற்புத நிகழ்வே இப்பாசுரம் சொல்லும் செய்தியாம்.


திருமாலுக்கே உரிய அந்த நான்கு திருக்கரங்களும் வெளிப்பட, கருடன் மேல் கம்பீரமாய் ஏறி, அசுரரை வென்று, தேவாதி தேவரும், முனிவரும் வரவேற்க, அந்த சக்கரவர்த்தித் திருமகனானவன் வைகுந்த நாயகனாய் திருவடிவம் மாறி, பரமபதம் மேவும் திருக்காட்சியை சற்றே அகக்கண்ணில் நோக்கினால், குலசேகர ஆழ்வாரின் பக்தியில் விளைந்த கவி நயமும், வர்ணனையின் பேரழகும் புலப்படுகிறது அல்லவா!!!




சராசரம் - அசையும், அசையாப் பொருள்கள்; உலகம்.

தாமம் - பெருமாளின் இருப்பிடமான வைகுண்டத்தைக் (பரமபதம்) குறித்தாலும், அச்சொல்லுக்கு இன்னும் பல பொருள்கள் உண்டு.
பூமாலை; கயிறு; வடம்; நகரம்; ஊர்; மலை; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ள மாதர் இடையணி; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (நன்றி: அகராதி.காம்)

--- எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails